சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தை லெக்கிமா புயல் தாக்கியதில், பலியானோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
ஜேஜியாங் மாகாணத்தை 187 கிலோ மீற்றர் வேகத்தில் லெக்கிமா புயல் தாக்கியது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களும், 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்தன.
அத்துடன் 3,64,000 ஹெக்டேர் பயிர்கள் மற்றும் 36,000க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த புயலின் பாதிப்பால் சேதமடைந்துள்ளன. ஷாண்டோங் பகுதியில் மட்டும் பயிர்கள் சேதமடைந்ததால், 939 மில்லியன் யுவான் அளவு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக ஷாண்டோங்கில் 18 பில்லியன் யுவான் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பலத்த காற்றின் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மேலும் ரயில் சேவைகள், விமான சேவைகள் ஆகியவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 3,200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்றைய தினம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 32 பேர் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில், இந்த பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கின் கிழக்கே கடலுக்குள், சாண்டோங் கடற்கரையில் இருந்து வடமேற்கே செல்லும்போது சூறாவளி பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.