ஜனாதிபதி வேட்பாளராக யாரை நியமிப்பது என்ற விடயத்தில் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்பட்டு வருகின்றது.
பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நியமிக்கவேண்டும் என்று கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் கனிஷ்ட தலைவர்கள் பலரும் கோரி வருகின்ற நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் தொடர்ந்தும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் விடாப்பிடியாக இருந்து வருவதாகவே தெரிகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் தானே வேட்பாளராக போட்டியிடவேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீவிரமாக உள்ளார். அவருக்கு ஆதரவாகவும் பல சிரேஷ்ட தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாராளுமன்ற குழுக்கூட்டத்தையும் கட்சியின் செயற்குழுக்கூட்டத்தையும் கூட்டி வாக்கெடுப்பினை நடத்தி பெரும்பான்மையை பெறுபவருக்கு வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்று சஜித் அணியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்புவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துகளும் பெறப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவுசெய்தபின்பே தேர்தலுக்கான பொதுக்கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்ெள்ளவேண்டும் என்று சஜித் அணியினர் கோரி வருகி்னறனர். ஆனால் பொதுக்கூட்டணியை அமைத்துவிட்டு வேட்பாளரை தெரிவு செய்யவேண்டும் என்று நிலைப்பாட்டிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் இருந்து வருகின்றார்.
இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அணியை சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் நேற்று கூட்டுக்கட்சிகளின் தலைவர் ஒருவரிடம் கருத்து தெரிவித்தபோது ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே நியமிக்கப்படவேண்டும். பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு கீழ் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இருக்க முடியாது. அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவார். அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து பலரும் வெளியேறும் நிலைமை ஏற்படும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் நேற்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களது கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போது பொது எதிரணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.