ரஷ்யா கடலுக்கு அடியில் ஏற்பட்ட வெடி விபத்து, அணுசக்தி ஏவுகணை வெடித்ததாக சந்தேகிக்கப்படும் விடயம் தொடர்பில் இறுதியாக மௌனம் கலைத்தது ரஷ்யா.
கடந்த வியாழக்கிழமை, ரஷ்யா கடலுக்கு அடியில் நடந்த சோதனையின் போது வெடி விபத்து ஏற்பட்டு குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர், இதனையடுத்து, கசிந்த கதிர்வீச்சால் அருகில் உள்ள பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் பரவியது.
இந்த விபத்து அணுசக்தியால் இயங்கும் ஏவுகணை சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என சர்வதேச அளவில் பரவலான சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.இதுதொடர்பாக மௌனம் காத்து வந்த ரஷ்யா தற்போது மௌனத்தை கலைத்துள்ளது.
நியோனோஸ்காவில் சோதனை இடத்தில் பியூரெஸ்ட்னிக் அல்லது ஸ்கைஃபால் என அழைக்கப்படும் கப்பல் ஏவுகணையின் ஈடுபாட்டை உறுதிப்படுத்த மறுத்த ரஷ்யா செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், விபத்துக்கள் துரதிர்ஷ்டவசமாக நடக்கின்றன. அவை துயரமானது. ஆனால் இந்த குறிப்பிட்ட விஷயத்தில், இந்த விபத்தில் உயிர் இழந்த வீரர்களை நினைவில் கொள்வது முக்கியம் என கூறினார்.
இந்த விபத்து ரஷ்யாவின் இராணுவ திறன்களை வளர்ப்பதற்கான முயற்சிகளைத் தடுக்கும் என்பதை மறுத்த பெஸ்கோவ், ரஷ்யாவின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்ற நாடுகள் அடைய முடிந்த அளவை விட கணிசமாக முன்னேறியுள்ளன என்று ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கூற்றுக்களை மேற்கொளிட்டு கூறினார்.
ரஷ்யாவின் தோல்வியுற்ற ஏவுகணை சோதனை வெடி விபத்திலிருந்த அமெரிக்க பாடம் கற்றுக் கொண்டிருப்பதாக கூறிய டிரம்ப், இதுபோன்று மேம்பட்ட தொழில்நுட்பம் அமெரிக்காவிடம் இருப்பதாக கூறினார்.
இதற்கு பதிலளித்த பெஸ்கோவ், உலகின் மற்ற நாடுகளை விட பாதுகாப்புக்காக அதிக பணம் செலவழிக்கும் உலக வல்லரசான ஒரு நாடு அத்தகைய திட்டங்களில் ஈடுபடவில்லை என்றால் அது மிகவும் விசித்திரமாக இருக்கும் என கூறினார்.
மேலும், இத்தகைய சூழ்நிலையில் ரஷ்ய கூட்டமைப்பின் குடிமக்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த அனைத்து திறமையான நிறுவனங்களும் எல்லாவற்றையும் செய்கின்றன என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.