தமிழகத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் அனாதையாக கிடந்த ரூ 50 ஆயிரத்தை நபர் ஒருவர் வங்கியிடமே ஒப்படைத்த நிலையில் அவரின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருப்பூரை சேர்ந்த கணேஷ் (38) பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் அங்குள்ள கனரா வங்கியில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார். பணம் செலுத்தும் இயந்திரத்தில் கார்டை உள்ளீடு செய்ததும், பணம் வைக்கும் பகுதி திறந்தது.
அதில், பணம் இருந்ததை பார்த்து கணேஷ் அதிர்ச்சியடைந்த நிலையில் சில நிமிடங்கள் குழம்பி நின்றார்.
தனக்கு முன்னதாக, பணம் செலுத்திய வாலிபரின் பணம் உள்ளே செல்லாமல் இருந்திருக்க கூடும் என நினைத்து, பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வேகமாக ஓடி வந்தார். அதற்குள், அந்த வாலிபர் சென்று விட்டார். கிடைத்த பணத்தை கணேஷ் எண்ணி பார்த்த போது 50 ஆயிரம் ரூபாய் இருந்தது.
இதையடுத்து பணத்துடன் கணேஷ் காவல் நிலையத்துக்கு வந்து நடந்ததை கூறிய நிலையில் பொலிசார் வங்கி மேலாளர் சத்திய மூர்த்தியை தொடர்பு கொண்டு பேசினார்.
பின், சத்தியமூர்த்தியிடம் 50 ஆயிரம் ரூபாயை கணேஷ் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து கணேசின் நேர்மையை அனைவரும் பாராட்டினார்கள்.
இந்நிலையில் அந்த பணம் யாருடையது என வங்கி அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.