அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவும் முன்னாள் அமைச்சர்!!

தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதிவிலிருந்து மணிகண்டன் கடந்த வாரம் புதன்கிழமை நீக்கப்பட்டார். பரமக்குடியில் அன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மணிகண்டன், கேபிள் கட்டண குறைப்பு பற்றி முதலமைச்சர் பழனி சாமி தன்னிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை என தெரிவித்திருப்பதும், கால்நடை அமைச்சர் மற்றும் கேபிள் டி.வி.கார்ப்பரேசன் சேர்மனுமான உடுமலை ராதாகிருஷ்ணனை குற்றம் சாட்டி பேசியதும் தான் அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதற்க்கு காரணம் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை கேபிள் டி.வி.கார்ப்பரேசன் சேர்மன் பதவியில் அமர வைத்தது குறித்து எடப்பாடிக்கும், மணிகண்டனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது தான் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.

இதனையடுத்து அவர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை மணிகண்டன் சந்தித்தார். அந்த சந்திப்பில் எந்த ஒரு பலனும் இல்லை என மணிகண்டன் கருதியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கடைசி முறையாக இது பற்றி பேச மணிகண்டன் முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் எந்த ஒரு முடிவும் வரவில்லை என்றால் மணிகண்டன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.