இந்தியா மேற்கிந்திய தீவுகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று, தொடரை கைப்பற்றி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடந்த டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா சாம்பியனாக மூடிசூடியது குறிப்பிடத்தக்கது.
முதலாவது ஒரு நாள் போட்டி மழையால் ரத்தான நிலையில் 2 வது போட்டியில் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில், போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாடியது.
மேற்கிந்திய தீவுகள் அணி 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனையடுத்து, டிஎல்எஸ் முறைப்படி போட்டி 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 35 ஓவர்களில் 7 விக்கெட் இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி 240 ஓட்டங்கள் எடுத்தது.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் கிறிஸ் கெய்ல் 72 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 35 ஓவர்களில் 255 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற திருத்தப்பட்ட இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 32.3 ஓவரில் 256 ஓட்டங்கள் எடுத்து டிஎல்எஸ் முறைப்படி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
இந்தியா தரப்பில் அணித்தலைவர் கோஹ்லி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 2-0 என்ற வெற்றி கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.