பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் பெண்களை அழைத்துச் சென்று இப்படியெல்லாம் செய்தது நீதான். உன்னால்தான் எல்லா பிரச்னையும் என்று கூறி, ஒருவரை மட்டும் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் என்றால், அது பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் சம்பவம் தான், பொள்ளாச்சியில் கல்லூரிப் பெண்கள் சிலரை காதல் என்கிற போர்வையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்து மிரட்டிய குற்றச்சாட்டிற்காக, திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஐந்து பேர் மட்டும் தான் குற்றவாளிகளா? இல்லை இந்த பெண்கள் விஷயத்தில் அரசியல்வாதிகளின் வாரிசுகளும் இருக்கின்றனரா என்பது குறித்து பொள்ளாச்சியில் தங்கி பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ ரகசிய விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐந்து பேரும் கடந்த ஜூன் மாதம் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
திடீரென்று, அவர்கள் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், பாதுகாப்பு காரணங்களாக சிறை மாற்றப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் சேலம் மத்திய சிறைக்குள்ளேயே குற்றவாளிகள் ஐந்துபேரும் தங்களுக்குள் மோதிக்கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதில், ஐந்துபேர் மீதும் குண்டாஸ் போடப்பட்டிருந்ததால், சிறைக்குள் மிகவும் சோகத்துடனேயே இருந்து வருவதாகவும், அவர்கள் அவ்வப்போது தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் ஒருநாள் திடீரென்று கைகலப்பாக மாறியுள்ளது.
குறிப்பாக ரிஷ்வந்த் என்கிற சபரிராஜனை மற்ற நான்கு பேரும் சேர்ந்து, பெண்களை அழைத்துச் சென்று இப்படியெல்லாம் செய்தது நீதான். உன்னால்தான் எல்லா பிரச்னையும். ஒழுங்காக நீதிபதியிடம் நான்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று ஒப்புக்கொள் என்று அவரை தாக்க முயற்சித்துள்ளனர்.
இதனால் சபரிராஜன் மட்டும் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சி.பி.ஐ இந்த வழக்கில் இவர்கள் மட்டும் தானா? இல்லை வேறு யாருக்கும் தொடர்பிருக்கிறதா? என்பது குறித்து ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், எல்லாவற்றுக்கும் தான்தான் காரணம் என்று ஒப்புக்கொள்ளச் சொல்லி சபரிராஜன் மற்ற குற்றவாளிகளால் தாக்கப்பட்டது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.