தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சிறப்பு காவல்படை காவலருடன் சென்ற இளம் பெண் லாட்ஜில் மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம், பரசலூர், மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர், சித்ரா(30). இவருக்கும், திருவாரூர் மாவட்டம், சிறுபுலியூரைச் சேர்ந்த ராஜ்குமார்(30) என்பவருக்கும்வரும் செப்டம்பர் மாதம் 16-ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
ராஜ்குமார், திருச்சியில் உள்ள சிறப்பு காவல் படையில், காவலராக பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் வந்த ராஜ் குமார், நேற்று முன்தினம் இரவு, சித்ராவை, அவரது வீட்டாரின் சம்மதத்துடன், திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை, இருவரும் திருச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள லாட்ஜில் அறை எடுத்து, இருவரும் தங்கியுள்ளனர்.
பின், ராஜ்குமார் பணிக்கு செல்ல, சித்ரா மட்டும் லாட்ஜில் இருந்துள்ளார். அப்போது காலை, 10:20 மணிக்கு இருவரும் அலைபேசியில் பேசியுள்ளனர்.
பகல், 11:௦௦ மணிக்கு ராஜ்குமார் லாட்ஜ்க்கு வந்தபோது துாக்கில் தொங்கிய நிலையில் சித்ரா இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இது குறித்து தகவல் தெரிவிக்காத ராஜ்குமார், சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம், சித்ராவின் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.
சித்ரா உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை, பெண் வீட்டார் துவக்கினர். சந்தேகமடைந்த கிராம மக்கள், அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன், பொலிசாருக்கு தகவல்தெரிவித்தனர்.
இதையடுத்து சித்ராவின் உடலை கைப்பற்றிய பொலிசார் பரிசோதனைக்காக, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.