கணவர் இறந்ததால் கஷ்டத்தில் வாழ்ந்த மனைவி! 27 வருடங்களுக்கு பின்னர் அவருக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

இந்தியாவில் நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரரின் மனைவிக்கு எதிர்பாராத ஆச்சரிய பரிசை கொடுத்து ஊர் மக்கள் அசத்தியுள்ளனர்.

மத்தியபிரதேச மாநிலத்தின் பிப்லியா கிராமத்தை சேர்ந்தவர் ஹவல்தர் மோகன் சிங். ராணுவ வீரரான இவர் கடந்த 1992ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.

இதன்பின்னர் அவரின் மனைவி ராஜு பாய் தனது பிள்ளைகளுடன் சிறிய ஓட்டு வீட்டில் அரசாங்கம் மாதா மாதம் கொடுக்கும் உதவித்தொகை 700 ரூபாயை வைத்து சிரமத்துடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு ரக்‌ஷாபந்தன் பண்டிகையின் போது ராஜூபாய் ஊரில் உள்ள இளைஞர்கள் பலரை தனது சகோதரர்களாக எண்ணி ராக்கி கயிறு கட்டினார்.

இதையடுத்து மோகன் நாராயண் என்ற இளைஞரின் தலைமையிலான குழு ஒரு முடிவை எடுத்தது.

அதாவது 2019ஆம் ஆண்டு ரக்‌ஷா பந்தனுக்குள் ராஜு பாய் வசிக்க நல்ல வீட்டை கட்டி தருவது என முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து ஊர் மக்களிடம் நிதி சேகரிக்கப்பட்டு 11 லட்சம் செலவில் புதிதாக வீடு கட்டப்பட்டது. இந்த வீடானது நேற்று ரக்‌ஷாபந்தன் தினத்தன்று ராஜு பாய்க்கு பரிசாக வழங்கப்பட்டது.

அவரை கெளரவிக்கும் விதத்தில் ஊரில் உள்ள இளைஞர்கள் தங்கள் கைகளை தரையில் வைத்து கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் கைகள் மீது நடந்தபடியே புது வீட்டுக்குள் மகிழ்ச்சியாக காலெடுத்து வைத்தார் ராஜூ பாய்.

நாட்டுக்காக உயிர் நீத்தவரின் மனைவிக்கு அளிக்கப்பட்ட மரியாதை தான் இந்த பரிசு என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.