லண்டனில் இருந்து மகள் ஊருக்கு வருவதில் தாமதம் ஆவதால் தனது பரோலை நீட்டிக்ககோரி நளினி தமிழகத்தின் உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவருக்கு மனு அனுப்பியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட நளினி பெண்கள் சிறையில் கடந்த 28 வருடங்களாக தண்டனை அனுபவித்து வருகிறார்.
இவர்களுடைய மகள் ஹரித்ரா லண்டனில் வசித்து வரும் நிலையில் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர், அவருக்கு இலங்கை தமிழரை தான் மாப்பிள்ளையாக தேர்வு செய்வார்கள் என தகவல் வெளியானது.
திருமண ஏற்பாட்டுக்காக நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்ட நிலையில் கடந்த 25ம் திகதி அவர் சிறையிலிருந்து வெளியில் வந்தார்.
இந்நிலையில் லண்டனில் இருந்து ஹரித்ரா தமிழகம் வர தாமதம் ஏற்படுவதால் மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர் ஆகியோருக்கு நளினி மனு அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நளினியின் தாய் பத்மா கூறுகையில், இதுவரை ஹரித்ராவுக்கு மணமகனாக 4 பேரை தேர்வு செய்து வைத்துள்ளோம். அவர்களில் மணமகன் யார்? என்பதை ஹரித்ரா தான் முடிவு செய்வார்.
அவருக்கு செப்டம்பர் மாதம் வரை தேர்வு இருப்பதால், அவர் தமிழகம் வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் நளினிக்கு பரோல் முடிய உள்ளதால் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர் ஆகியோருக்கு நளினி மனு அனுப்பி உள்ளார் என கூறியுள்ளார்.
இதனிடையில் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க அனுமதி கேட்டு நளினி எஸ்.பி. பிரவேஷ்குமாரிடம் மனு அளித்தார்.
அத்திவரதர் தரிசனம் இன்று கடைசி நாளாகும், மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு நளினியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.