அரசு சார்பில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் சமூக விரோதிகள் அத்துமீறி உள் நுழைந்து ஊழியர்களை தாக்கி பணம் மற்றும் மதுபாட்டில்களை களவாடி செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து பல இடங்களில் நடந்து வருகின்றது.
சில நாட்களுக்கு முன்பு, கிருஷ்னகிரியில் இப்படி தான் நடைபெற்றது. இதுபோன்ற பல சம்பவங்களை அடிப்படியாக கொண்டு டாஸ்மாக் நிறுவனம் அதிரடியாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “மதுக்கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் கூடுதல் மேற்பார்வையாளர்கள், மதியம் 12 மணிக்கு கடைகளை திறக்கும்போதும், இரவு 10 மணிக்கு கடைங்களை மூடும் போதும் நிச்சயம் கடைகளில் இருக்க வேண்டும். கடையின் சாவியானது மேற்பார்வையாளர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும். ஒவ்வொரு கடையிலும் குறைந்தது இரண்டு, மூன்று ஊழியர்கள் இருக்க வேண்டும்.
மேற்பார்வையாளர் மற்றும் கூடுதல் மேற்பார்வையாளர்கள் அதிகம் விற்பனையாகும் நேரமான மாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை அவசியம் பணியில் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இரும்பு பாதுகாப்பு பெட்டியில் வசூல் பணத்தை வைக்காமல் மேஜை மீது அல்லதுஅட்டை பெட்டியில் வைப்பது மற்றும் வீட்டிற்கு எடுத்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
வெளிநபர்கள் கடைக்குள் நுழைவதை தடுக்க மற்றும் ஊழியர்கள், மது வகைகள், பணத்தை பாதுகாக்க இனி அனைத்து மதுக்கடைகளிலும் ‘கிரில்’ கேட் அமைக்கபட வேண்டும் மேலும், அந்த கேட் எப்பொழுதும் உட்புறமாக பூட்டப்பட்டிருக்க வேண்டும். ” என கூறப்பட்டுள்ளது.