தற்கொலைக்கு முயற்சித்த நடிகை மதுமிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள நடிகை மதுமிதா, தற்கொலைக்கு முயன்றிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, சில நாட்களாகவே சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்தது. மக்களால் வாக்களிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடன், வீட்டில் பெரும் பூகம்பமே ஏற்பட்டது என்று தான் சொல்லவேண்டும். அதிலும் நேற்று ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில், ஆண்கள் ஒரு அணியாகவும், பெண்கள் ஒரு அணியாகவும் பிரிந்து சண்டை போடத் தொடங்கியது பார்க்கும் ரசிகர்களை மேலும் கோபத்தில் ஆழ்த்தியது. இதில் ஆண்கள் அணியில் லோஸ்லியாவும், பெண்கள் அணியில் சேரனும் சேர்ந்துகொண்டனர். இருஅணிகளும் பிரிந்து சண்டைபோட்டனர்.

பின்னர் நடந்த அடுத்த தலைவருக்கான டாஸ்கில் மதுமிதா அடுத்த வாரத்திற்கான தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் மதுமிதா பிக்பாஸ் வீட்டிற்குள் தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதற்கேற்றார் போலவே இன்றைக்கு ப்ரோமோக்கள் வெளியிடுவதை, விஜய் தொலைக்காட்சி தாமதப்படுத்தியது. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் ப்ரோமோ கேட்டு விஜய் தொலைக்காட்சியின் சமூக வலைதள கணக்கில் உள்ள மற்ற நிகழ்ச்சியின் ப்ரோமோக்களில், பிக்பாஸ் ப்ரோமோ கேட்டு நச்சரிக்க, சுட சுட ப்ரோமோ வருவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தொலைக்காட்சி அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியாகி சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர் இன்றைய தொகுப்புக்கான முதல் ப்ரோமோவை அத்தொலைக்காட்சி வெளியிட்டது. அதில் மதுமிதா கையில் கட்டுடன் வந்து கமலிடம் பேசிக்கொண்டு இருக்கும் காட்சியும், அது பற்றி பேசும் இயக்குநர் சேரன், மதுமிதா எடுத்தது தவறான முடிவு என்று கூறும் காட்சியும் இடம்பெற்றிருந்தது.

ஏற்கனவே கதவு திறந்து வைக்கப்பட்டால், வெளியேறும் முதல் நபராக நானாக தான் இருப்பேன் என்று நிமிடத்திற்கு ஒருமுறை சொல்லி வந்த மதுமிதா, தற்போது தற்கொலைக்கு முயற்சித்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து உடல்நலனை கருத்தில் கொண்டு வெளியேற்றப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.