அனைத்து கட்சிகளும் தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து பகிரங்கப்படுத்த முடியும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரினதும் கொள்கைகள், எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கட்சிக்குள் ஆராய வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவை பெயரிட்டுள்ள நிலையில், மக்கள் விடுதலை முன்னணி இன்றைய தினம் தமது வேட்பாளரை அறிவிக்கவுள்ளது.
மேலும் தமது வேட்பாளராக யாரைகளமிறக்குவது என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஏனைய கட்சிகளுடன் இணைந்து அமைக்கவுள்ள கூட்டணியின் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் அதே தினத்திலேயே ஜனாதிபதி வேட்பாளரும் தீர்மானிக்கப்படுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் கூறியிருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில் சிறுபான்மையினக் கட்சிகள் யாருக்கு ஆதரவு வழங்கும் என்ற விடயம் முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகின்றது.
அனைத்துக் கட்சிகளும் தமது ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்த பின்னர், அவர்களின் கொள்கை மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளிட்டவற்றைக் கருத்திற்கொண்டு யாருக்கு ஆதரவு
வழங்குவதென்பதைத் தீர்மானிப் போம் என்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு அறிவித்திருந்தது.