ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 183 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காபுல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு 17 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.
இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே திடீரென வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் சம்பவ இடத்திலேயே பலர் கொல்லப்பட்டனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் திருமண விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் என சுமார் 63 பேர் உயிரிழந்த நிலையில், 183 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாமென செய்திகள் தெரிவிக்கின்றன.