ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக இலங்கை கிரிக்கெட் அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இலங்கையின் காலி மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டம் இன்று துவங்கியது.
10 விக்கெட்டுகளுடன் 135 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் திமுத் கருணாரத்ன தன்னுடைய சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 122 ஓட்டங்களுடன் அவுட்டாகி வெளியேறினார்.
அவருக்கு எதிர்முனையில் விளையாடி கொண்டிருந்த லஹிரு திரிமாண்ண 64 ஓட்டங்களை பெற்று அவுட்டானார். ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து 268 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் காலி மைதானத்தில் அதிகபட்ச இலக்கினை அடைந்து வெற்றிபெற்ற அணி என்ற பெருமையை இலங்கை அணி படைத்துள்ளது.
நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பில் நடைபெற உள்ளது.