தோஷம் கழிப்பதாக பெண்களிடம் ஜோதிடர்கள் செய்த செயல்…

தமிழகத்தில் மாங்கல்யம் தோஷம் கழிப்பதாக கூறி, பெண்களை ஏமாற்றி நகைகளுடன் மாயமான கிளி ஜோதிடர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கரும்புளிபட்டியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. ஐஸ் வியாபாரியான இவருக்கு வெள்ளப்பொண்ணு என்ற மனைவியும், ராமர் என்ற மகனும் உள்ளனர்.

ராமார் தனியார் சீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மீனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமரை நாய் கடித்ததாகவும், அவர்களது வீட்டிற்குள் பாம்பு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை ஏதோ அபசகுணம் என்று நினைத்து மாமியாரும், மருமகளும் பயந்துள்ளனர்.

சம்பவத்தன்று அண்ணாதுரையும், ராமரும் வேலைக்குச் சென்றுவிட, குழந்தைகளுடன் மாமியாரும், மருமகளும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது கிளி ஜோதிடம் பார்ப்பதாக இரண்டு பேர் வந்துள்ளனர். அவர்களை அணுகிய வெள்ளப்பொண்ணும், மீனாவும் வீட்டில் நடக்கும் சம்பவங்களை ஜோதிடர்களிடம் கூறியுள்ளனர்.

அப்போது அவர்கள் மீனாவுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும், அதைக் கழிக்க வேண்டும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். அதோடு தேங்காய், சூடம், ஊதுபத்தி, குங்குமம் போன்ற பூஜைப் பொருட்களுடன் களமிறங்கிய அந்த ஜோதிடர்கள், தோஷம் கழிக்க 5,000 ரூபாய் பெற்றுக் கொண்டதுடன் தோஷம் கழிக்க வேண்டும் என்றால், உடலில் நகைகள் இருக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.

இதைக் கேட்ட மீனாவும், வெள்ளப்பொண்ணுவும், காது, மூக்கு, கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 சவரன் நகைகளைக் கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளனர்.

மாமியாரையும் மருமகளையும் முக்காடு போட்டு அமரச் சொன்ன ஜோதிடர்கள், ஒரு கைப்பிடி அரிசியை அள்ளி இரு காகிதங்களில் மடித்துக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

அந்த அரிசியில் 238 வரை மாமியாரும், 237 வரை மருமகளும் எண்ண வேண்டும் என்று கூறிய ஜோதிடர்கள், சுடுகாடு சென்று மண் அள்ளி உருவம் செய்ய வேண்டும் என்றும், தாங்கள் சென்று மண் அள்ளி வரும் வரை எண்ணிக் கொண்டிருக்குமாறும் நகைகளுடன் புறப்பட்டு சென்றுள்ளனர்.

வெகுநேரமாகியும் அவர்கள் திரும்பி வராமல் இருக்கவே சந்தேகம் அடைந்த வெள்ளப்பொண்ணு, ஜோதிடர்கள் கொடுத்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் எதிர்முனையில் பேசிய ஜோதிடர், குரலை மாற்றி பேசவே அதிர்ச்சி அடைந்த வெள்ளப்பொண்ணு உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஜோதிடர்களின் செல்போன் எண்ணிற்கு பொலிசார் தொடர்பு கொண்ட போது, பொலிசார் மிரட்டும் வகையில் அவர்கள் பேசியுள்ளனர். இதை அடுத்து, மோசடி ஜோதிடர்களை பொலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.