பிரித்தானியாவின் புதிய பிரதமரான போரிஸ் ஜான்ஸன் பிரக்ஸிட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று நெருக்கடி அதிகரித்து வருகிறது.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்ஸன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பிரக்ஸிட் விவகாரம் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த மாதம் 3-ஆம் திகதி வரை கோடை கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டு, போரிஸ் ஜான்ஸனிடம் அளித்துள்ள கடிதத்தில், பிரெக்ஸிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனுடான சிறப்பு உறவு குறித்து எந்த ஒப்பந்தமும் இல்லாமல், அந்த அமைப்பிலிருந்து வெளியேறுவதற்கான சூழல் நெருங்கி வருகிறது. இதன் காரணமாக, நமது நாடு மாபெரும் பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.
இது ஒரு தேசிய அவசரநிலையாகும். எனவே, விடுமுறையில் இருக்கும் எம்.பி.க்களை உடனடியாக அழைத்து, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை ஏற்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.