கடற்கரையில் இரு பெண்கள் செய்த மோசமான செயலால், சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் கடற்கரை ஒன்று சுற்றுலாப்பயணிகளுக்கு மூடப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிலிப்பைன்சிலுள்ள Boracay கடற்கரையில் ஒரு பெண், குழந்தை மலம் கழித்த நேப்பியை (nappy) கடற்கரை மணலில் புதைப்பதைக் கண்டு அங்கிருந்த சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சியுற்றனர்.
அந்த அருவருப்பான செயலை தனது கமெராவில் படம் பிடித்த ஒரு பெண், மற்றொரு குழந்தையின் தாய், கடல் தண்ணீரில் மலம் கழித்த குழந்தையை கழுவுவதையும் படம் பிடித்தார்.
அந்த காட்சியை உள்ளூர் ஊடகத்திடம் ஒப்படைத்தார் அந்த பெண். உடனடியாக அதிகாரிகளுக்கு தகவலளிக்கப்பட, புகழ் பெற்ற அந்த கடற்கரையில் குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
அந்த பகுதி 72 மணி நேரத்திற்கு மூடப்பட்டிருக்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடல் தண்ணீரில் மனித மலம் கலந்திருப்பதால், அப்பகுதியில் நீந்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியுற்ற சுற்றுலாப்பயணியாகிய கிரேஸ் என்னும் பெண் கூறுகையில், எங்களில் பலர் அந்த பெண்கள் செய்த மோசமான செயலைக் கண்டு அதிர்ச்சியுற்றோம், அந்த பெண்களைப் பார்த்து கத்தினோம் என்கிறார்.
அதிகாரிகள் அந்த செயலை செய்த பெண்கள் யார் என்று கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளதோடு, அந்த நேப்பி எங்கு புதைக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டறிந்து அந்த பெண்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.