புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பவர்களும் காலாவதியான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கும் மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்காக செல்லும் மக்களை வவுனியா கச்சேரியில் உள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மிகவும் உதாசீனமாக நடத்திவருவதுடன் அவர்களை அலைகழிக்கும் வகையிலும் நடந்துகொள்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்.
அதைவிட 80 – 90 சதவீதமான தமிழ்மக்கள் சேவைபெறும் அலுவலகத்தில் தமிழை கொச்சையாகவும் தவறாகவும் பேசும் பெரும்பான்மை இனத்தவர்கள் பணியாற்றுவதால் அவர்கள் சொல்வது மக்களுக்கு புரிவதுமில்லை மக்கள் சொல்வது அவர்களுக்கு புரிவதுமில்லை இதனால் பலர் மருத்துவச்சான்றிதழ் பெறுவதற்காக இரண்டு மூன்று நாட்கள் நேரத்தை செலவுசெய்ய வேண்டியுள்ளது.
அங்கு பொறுப்பான பதவி வகிக்கும் பெண் அதிகாரி ஒருவர் சேவைபெற வரும் மக்களுடன் அதிகார தோரணையில் நடந்துகொள்வதுடன் தூர இடங்களிலிருந்து அலுவலகநேரமான காலை 9.00 மணிக்கு வருபவர்களையும் திருப்பி அனுப்பி அவர்களை அலையவிடுவிட்டுகின்றார் என பலர் ஆதங்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு பாலூட்டும் தாயொருவரும் இரண்டு குழந்தைகளும் கணவரும் குறித்த தாயின் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதிப்பிப்பதற்காக மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள அலுவலகத்திற்கு சென்றிருந்தனர்.
9.00 மணிவரை காத்திருந்துவிட்டு குறித்த தாய் குழந்தைக்கு பாலூட்டுவதற்காக அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற நேரம் அலுவலகத்தில் இலக்கமிடப்பட்ட விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டது அப்போது அந்த பாலூட்டும் தாயின் கணவர் மனைவிக்கான விண்ணப்ப படிவத்தை பெற முயன்றபோது உரியவர் இல்லாமல் படிவம் தரமுடியாதென கூறி அங்கிருந்த ஊழியர் அலுவலகத்திற்கு பொறுப்பான பெண் ஒருவரிடம் பேசுமாறு அனுப்பிவைத்தார்.
அவரிடம் தாய் பாலூட்ட சென்ற விடத்தை சொல்லி கேட்கவும் அப்படி தரமுடியாது உரியவர் வரவேண்டும் என கூறி அனுப்பிவிட்டார். கணவர் உடனடியாக சென்று குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த மனைவியை ஐந்து நிமிடங்களுக்குள் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தார். அங்கு வந்த தாய்க்கு இன்று சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது என திருப்பி அனுப்பியுள்ளனர்.
இன்றைய நாளை மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்காக வீணடித்தும் எந்தப் பயனுமின்றி குறித்த குடும்பம் உள்ளிட்ட பலர் வீடு திரும்பியுள்ளனர்.
நாளாந்தம் இவ்வாறு பல மக்கள் இந்த அலுவலகத்தில் உதாசீனப்படுத்தப்படுவதாக அங்கு கூடியிருந்த பலர் அங்கு சென்ற எமது ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளனர்.
அரச அதிகாரிகள் அனைவரும் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம்பெறும் மக்கள் சேவகர்கள் என்பதை மறந்து மக்கள் மீது அதிகாரத்தையும் அடாவடித்தனத்தையும் காட்ட முயல்வதை அவர்களின் மேலதிகாரிகள் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் சரியான மக்கள் சேவையை வழங்க ஆவண செய்ய வேண்டும்.