கன்னியாகுமரியில், கொள்ளையர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்காத காவல்துறை மற்றும் தமிழக அரசைக் கண்டித்து, மொட்டை அடித்து மாட்டிடம் மனு கொடுக்கும் நூதனப் போராட்டம் நடந்தது.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க 12 சிவாலயங்களில், இரண்டாவது சிவாலயம் திக்குறிச்சி மகாதேவர் கோயில். இந்தக்கோயிலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி, கருவறை பூட்டை உடைத்து மகாதேவரின் ஐம்பொன் சிலை, நந்தி சிலை உட்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தக்கலை டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீஸார், கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த வழக்கை, ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றவும், கொள்ளையர்களை விரைந்து கைது செய்யக் கோரியும், இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில், சம்பவம் நடந்து ஓராண்டாகியும் கொள்ளையர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்காத காவல்துறை மற்றும் தமிழக அரசைக் கண்டித்து, இந்து முன்னணி சார்பில் நேற்று திக்குறிச்சியில் நூதன போராட்டம் நடத்தப்பட்டது. திக்குறிச்சி மகாதேவர் கோயில் அருகே, தாமிரபரணி ஆற்று பாலத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் மொட்டை அடித்து, பசுமாட்டிடம் மனு கொடுத்தார்.