உத்தரப் பிரதேசம் மீரட் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் உடல் நலத்தைச் சரி செய்வதற்காக ஒரு மந்திரவாதியிடம் சென்று ஆலோசனை பெற்றுள்ளார்.
அத்துடன் குறித்த மந்திரவாதி, தினமும் கணவருக்குக் காலையில் 4 லட்டுக்களும், மாலையில் 4 லட்டுக்களும் உண்ணக் கொடுக்கவேண்டும். இடைப்பட்ட நேரத்தில் எந்த உணவும் கொடுக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் மந்திர தந்திரங்களில் கொண்ட நம்பிக்கை காரணமாக மந்திரவாதியின் ஆலோசனைப்படி கடந்த சில மாதங்களாகக் கணவருக்கு வெறும் லட்டுகளை மட்டுமே உண்ணக் கொடுத்துள்ளார். இதனால் குறித்த கணவர், மனைவியின் மூடநம்பிக்கையையும் தான் அனுபவிக்கும் துன்பத்தையும் முன்வைத்து விவாகரத்து வேண்டும் எனக் கூறி நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த கணவர் நீதிமன்றில் , ” எனக்குக் கடந்த சில மாதங்களாக லட்டுகளைத் தவிர வேறு எதையும் எனது மனைவி உண்ணக் கொடுக்கவில்லை. மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு காலையில் 4 லட்டுக்கள், மாலையில் 4 லட்டுக்கள் மட்டுமே தருகிறார். இடைப்பட்ட நேரத்தில் எதுவுமே உண்ணத் தருவதில்லை. இனியும் என் மனைவியுடன் என்னால் வாழமுடியாது, அதனால் விவகாரத்துக் கோரியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்கு அமைவாக இருவருக்கும் மனநல வைத்தியரின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. இருவரிடமும் உரையாடிய ஆலோசகர் இதுகுறித்து கூறுகையில், ” கணவன், மனைவி இருவரிடமும் பேசினோம். அந்த பெண் சில மூடநம்பிக்கைகளைத் தீவிரமாக நம்புகிறார். லட்டு உட்கொள்வதன் மூலம் தனது கணவரின் உடல்நிலை சரியாகும் என நம்பித்தான் தொடர்ந்து அவருக்கு லட்டை மட்டுமே கொடுத்துள்ளார். மற்றவற்றை ஏற்க மறுக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.