ராசி, நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டு ஒருவரின் குணாதிசயங்களை கூறுவது போல ஒருவர் பிறந்த தமிழ் மாதத்தை அடிப்படையாக கொண்டும் அவர்களின் குணாதிசயங்கள் கூறப்படுகிறது. ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்களை பற்றி காண்போம்.
சிம்ம ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்வதை ஆவணி மாதமென்று அழைக்கின்றோம். இது ஆண்டின் ஐந்தாவது மாதம் ஆகும். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும், வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் கூறுவார்கள்.
ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள் சூரியனைப் போலவே எதிலும் தலைமை பண்பு வகிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். இவர்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் ஆராய்ந்து பல முறை சிந்தித்து செயல்படக்கூடியவர்கள். எப்போதும் சுதந்திரமாக இருக்கவே விரும்புவார்கள். இவர்கள் பெருந்தன்மையான குணம் கொண்டவர்களாகவும் பெயர், புகழ் கிடைக்க எடுத்த காரியங்களில் மிகவும் போராடி வெற்றி பெறுபவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் சிக்கனமாக இருப்பார்கள். கடன் வாங்கப் பிடிக்காது. இவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் விரைவில் பணக்காரர்களாக உயர்வு பெறுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் பெரும் செல்வந்தர்களாக மாறுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள், தான் செய்வது மட்டுமே சரி, பிறர் செய்வது தவறு என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். வீட்டின் கடைசி மகளாகவோ அல்லது மகனாகவோ ஆவணி மாதத்தில் பிறந்திருந்தால் மிகவும் மதிப்புடன் வாழ்வார்கள்.
இவர்கள் எந்தவிதமான சிக்கலான சூழ்நிலைகளிலும் கொடுத்த வாக்கை தவறாமல் காப்பாற்றுவார்கள். தான தர்மங்கள் செய்வதில் பெரும் வள்ளலாக திகழ்பவர்கள். இவர்களுக்கு உதவி செய்யும் குணம் பிறவியிலேயே இருக்கும். இவர்களின் பேச்சு எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லாமல் உண்மையாக இருக்கும், முன்வைத்த காலை பின்வைக்காமல் ஓயாமல் போராடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு அனுபவ அறிவும், படிப்பறிவும் கை கொடுக்கும். அரசியல் அதிகார பதவிகள் மூலம் இவர்களுக்கு வீடு, நிலபுலன்கள் சேரும். தாய்வழி, தாய்மாமன், மாமன் வர்க்கத்தினர் மூலமாகவும் செல்வம் சேரும். அதேநேரம் வீட்டிற்கு வந்தவர்களை நல்லபடியாக உபசரிப்பார்கள். இவர்கள் பயணம் செய்வதை மிகவும் விரும்புவார்கள். இயற்கையை ரசிப்பதோடு அதை பாதுகாக்கவும் செய்வார்கள். ஆன்மீகத்தில் நல்ல நிலையை அடைவார்கள். சிவபெருமான், முருகன், அய்யனார், ஐயப்பன், காளி, துர்க்கை, கருப்பண்ணசாமி போன்ற தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு இருக்கும்.
வாழ்க்கைத்துணையைப் பொறுத்தவரை இவர்களுக்கு சில மனக்கசப்புகள் இருக்கும். இவர்களின் குணத்தை புரிந்துகொண்டு ஒத்துழைக்கும் பெண் அமைந்தால் இவர்களுக்கு நிம்மதியான மணவாழ்க்கை உண்டு. சுக்கிரன், குரு, சனி கிரகங்கள் நல்ல பலமான அம்சத்தில் அமைந்தால் இவர்களுக்கு மனைவி வகையில் மகிழ்ச்சியும், சொத்து அனுபவிக்கும் யோகமும் கிடைக்கும்.