மலேசியாவில் தொழில் செய்து வரும் நபர் ஒருவர் ஊருக்கு திரும்பிய நிலையில் சாலை விபத்தில் மகள்கள் இருவருடன் பலியாக சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உஸ்மான் அலி. தொழிலதிபரான இவருக்கு ராமநாதபுரத்தில் ஹொட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு ஸ்தாபனங்கள் உள்ளன.
மட்டுமின்றி மலேசியாவிலும் உஸ்மானுக்குச் சொந்தமாக ஹொட்டல்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், உஸ்மான் அலி நேற்று விமானம் மூலம் மலேசியாவிலிருந்து மதுரை சென்றுள்ளார்.
உஸ்மானுடன் அவரின் மகள்கள் ஹைநூல் ரசியா, தஸ்லிமா பானு மற்றும் மருமகன் முகம்மது கஸாலி ஆகியோரும் சென்றுள்ளனர்.
மதுரை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊரான சாத்தான்குளத்துக்கு காரில் வந்துள்ளனர்.
அப்போது பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இவர்களது கார் வந்துகொண்டிருந்தபோது சாலையின் மறுபுறத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த சங்கர் என்பவர், காரின் குறுக்கே வந்துள்ளார்.
இவர் மீது மோதுவதைத் தவிர்க்க நினைத்த கார் சாரதி வண்டியை திருப்ப முயன்றுள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த கார், சங்கரின் மீது மோதியபடி சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த உஸ்மான் அலி, அவரின் மகள்கள் ஹைநூல் ரசியா, தஸ்லிமா பானு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்ற சங்கரும் மரணமடைந்துள்ளார். உஸ்மானின் மருமகன் முகம்மது கஸாலி படுகாயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த பரமக்குடி பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவுசெய்து தப்பி ஓடிய கார் சாரதியை தேடிவருகின்றனர்.