சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தையை நாய்போல் பயிற்றுவிக்கும் நிகழ்ச்சி ஒன்று வெளியானதைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பிரிஸ்டலைச் சேர்ந்த Jo (39) மற்றும் Garrett (40) என்னும் தம்பதியினர், நாய்களுக்கு பயிற்சி அளிப்பவரான Jo-Rosie Haffenden என்னும் பயிற்சியாளரைக் கொண்டு, அதிக குறும்புத்தனம் செய்யும் தங்கள் மகன் Greydonக்கு (3) பயிற்சியளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
அந்த பயிற்சியாளர் நாய்க்கு பயிற்சியளிப்பதுபோல் குழந்தைக்கு பயிற்சியளிப்பது மட்டுமின்றி, பாரம்பரிய குழந்தை வளர்ப்பு முறைகளையும் குறை கூறினார்.
அந்த நிகழ்ச்சியைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்ததோடு, அது தங்களை மிகவும் பாதித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், அந்த பயிற்சியாளர், உட்கார் என்று சொல்லி சொடுக்குப்போட, நாயும் குழந்தையும் ஒரே நேரத்தில் உட்காருவதைக் காணமுடிகிறது.
மிருகங்கள் மீது பயிற்சிகள் செய்வதையே நாம் நம்பாதபோது, இப்படி குழந்தைகளை மோசமாக நடத்தும் ஒரு நிகழ்ச்சியை எப்படி ஒளிபரப்பலாம் என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொருவர், அந்த குழந்தை குறும்புத்தனம் செய்வதை விட்டு விட்டு, மொத்தமாக அமைதியாகிவிட்டான் என்றால், பாவம் அந்த குழந்தை, அவனுக்கு வேண்டியது பெற்றோரின் கவனம் அவ்வளவுதான், எனவே, அந்த பெற்றோருக்குதான் உதவி தேவையே தவிர அந்த குழந்தைக்கு அல்ல என்று கூறியுள்ளார்.
அந்த குழந்தையை அந்த பயிற்சியாளர் ஒருமுறை கூட கட்டி அணைக்கவோ முத்தமிடவோ கூட இல்லை என்று கூறும் அவர், அதை பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது என்கிறார்.