வடகொரியாவில் அணு உலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் பொதுமக்கள் புழங்கும் ஆற்றில் கலப்பதால், பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிருக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக புகைப்படங்களுடன் அம்பலமாகியுள்ளது.
வடகொரியாவில் 2003 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டுவரும் யுரானியம் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தொடர்பில் தற்போது நடுங்க வைக்கும் புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஆய்வாளரான ஜேக்கப் பாகில் என்பவர் மேற்கொண்ட ஆய்வில் இந்த அதிரவைக்கும் சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.
தொடர்புடைய யுரேனியம் ஆலையில் இருந்து கழிவுகளை அருகாமையில் உள்ள கிடங்குக்கு அனுப்ப குழாய் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.
அந்த குழாயானது ஆற்றைக் கடந்து கிடங்குக்கு செல்கிறது. தற்போது அந்த குழாயில் இருந்தே கதிர்வீச்சு அபாயம் கொண்ட கழிவுகள் Ryesong ஆற்றில் கசிவதாக தெரியவந்துள்ளது.
சீனாவுக்கும் கொரிய தீபகற்ப பகுதிக்கும் இடையே பாயும் இந்த ஆற்றின் சுற்றுவட்டாரத்தில் சுமார் 600 மில்லியன் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
மட்டுமின்றி Ryesong ஆற்றின் 9 மைல்கள் சுற்றளவில் சுமார் 400,000 மக்கள் குடியிருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் அந்த ஆற்று நீரையே குடிக்கவும், வயலுக்கு இறைக்கவும் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
இதனால் இந்த நீரை பயன்படுத்தும் மக்களுக்கு நுரையீரல் புற்றுநோய், நரம்பு தொடர்பான பிரச்னைகள், மூளையில் பாதிப்பு உள்ளிட்டவைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும்,
இந்த பாதிப்பானது சிறார்களுக்கு அதிகமாக இருக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஆலையானது 2003 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
யுரேனியம் ஆலையில் இருந்து வெளியேறும் கசிவுகள் கடந்த 3 ஆண்டுகளில் 18,000 சதுர மீற்றர் அளவுக்கு ஆற்றில் குவிந்துள்ளதாகவும் ஜேக்கப் பாகில் சுட்டிக்காட்டியுள்ளார்.