பிரித்தானிய உள்துறைச்செயலாராக 24 ஜூலை 2019 பொறுப்பேற்றுக் கொண்ட பிரீத்தி பட்டேல், அக்டோபர் 31 அன்று பிரெக்சிட் நிறைவேற்றப்பட்ட உடன்தானே, ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா போக்குவரத்து முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள மற்ற நாடுகளில் வாழும் பிரித்தானிய குடிமக்கள், அவரது திட்டத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்குத்தான் அதிக பிரச்னை என்கிறார் வெளிநாட்டில் வாழும் பிரித்தானிய குடிமகளான Fiona Godfrey என்பவர்.
பிரித்தானியாவில் பிறந்து ஜேர்மானியரை மணந்து லக்சம்பர்கில் வாழும் Fiona, தடையில்லா போக்குவரத்து இருப்பதால்தான், ஒரு மாதத்தில் பலமுறை எல்லை தாண்டி பணி நிமித்தம் பெல்ஜியத்திற்கு தன்னால் சென்று வர இயல்வதாக தெரிவிக்கிறார்.
பிரான்சைப் பொருத்தவரை, அங்கு கட்டாய பதிவு முறை நடைமுறையில் இல்லை. அதாவது, பிரான்சில் வாழும் லட்சக்கணக்கான பிரித்தானிய குடிமக்கள், தாங்கள் பிரெக்சிட்டுக்கு முன்பே பிரான்சில் வாழ்ந்து வருபவர்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் எதுவுமின்றி அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.
அப்படியிருக்கும் நிலையில், பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள், பிரான்சைவிட்டு வெளியேறி, பின் மீண்டும் பிரான்சுக்கு வரும்பட்சத்தில், பிரான்சில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் பிரித்தானிய குடிமக்களுக்கும், சுற்றுலாவுக்கோ அல்லது வர்த்தகம் தொடர்பாகவோ வந்தவர்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது பெரிய பிரச்னையாக இருக்கும்.
அதிலும் தடையில்லா போக்குவரத்தை எடுத்தோம் கவிழ்த்தோம் என திடீரென நிறுத்துவதால், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிரித்தானியர்களுக்கு அதிக பாதிப்பு.
காரணம், பிரான்சில் பணிக்காலம் முடிந்து ஒருவர் ஸ்பெயினுக்கு செல்ல முடிவு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம், ஸ்பெயினைப் பொருத்தவரையில், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் தங்கள் வருவாயை நிரூபிப்பதோடு, ஆண்டின்றிற்கு 30,000 யூரோக்கள் மதிப்பிலான காப்பீடும் வைத்திருக்க வேண்டும்.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் பிரித்தானியர்களில் 80 சதவிகிதத்தினர் குறைந்த வருவாய் கொண்டவர்கள்தான்.
ஆக, அக்டோபரோ அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்தோ, தடையில்லா போக்குவரத்தை முடிவுக்கு கொண்டு வருவதன்மூலம், பிரித்தானியா பிரான்ஸ் உட்பட மற்ற நாடுகளில் வாழும் தனது சொந்த குடிமக்களின் உரிமைகளையும், வாய்ப்புகளையும் வேண்டுமென்றே பறிக்கிறது என்பது மட்டும் உண்மை என்கிறார் Fiona.