டெல்லியில் இரண்டு நாட்களாக ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டதிலிருந்து அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் இன்று மாலை வரை வெளியாகவில்லை. இருப்பினும் நான் ஓடி ஒளிய வேண்டிய அவசியமில்லை என அவருடைய வழக்கறிஞர் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு முன்ஜாமீன் பெறுவதில் மூத்த வழக்கறிஞரான சல்மான் குர்ஷித், கபில் சிபில் போன்றோர் மிகுந்த சிரத்தை எடுத்து உச்சநீதிமன்றத்தில் வட்டம் அடித்து வருகிறார்கள். ஒருவழியாக நாள் முழுவதும் போராடி வழக்கினை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டு வந்தார்கள். இந்த வழக்கினை நாளை மறுநாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்ததுள்ளது.
தன்னுடைய தரப்பு விளக்கங்களை எடுத்து வைத்த பிறகு., காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து டெல்லியில் இருக்கும் தனது இல்லத்திற்கு ப.சிதம்பரம் சென்றார். அவர் இல்லத்திற்கு சென்ற செய்தியை அறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் அவரது இல்லத்தினை சுற்றி வளைத்தனர். வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சுவரேறி குதித்து உள்ளே சென்றனர்.
அரைமணிநேரத்திற்கு பின்னர் சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை காரில் அழைத்து சென்றனர். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அதிகாரபூர்வமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.