அடிமேல் அடி வாங்கும் சிதம்பரம்!

நீதிபதி சிபிஐ வாதத்தினை ஏற்று சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வந்த நிலையில், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால், மேலும் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறுவதால், அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் மூன்று மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் அவரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து அவர் சிபிஐ நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அதனால் நீதிமன்ற வளாகம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சிதம்பரத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி சிபிஐ சார்பில் துஷார் மேத்தாவும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்கள்.

சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியதும் சி.பி.ஐ. சார்பில் வாதிடும் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, சிதம்பரத்தை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு மனு அளித்தார். 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட சிபிஐ மனுவில், சிதம்பரத்திற்கு ஜாமீனில் வராத பிரிவில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

துஷார் மேத்தா தொடர்ந்து வாதிடுகையில் சிதம்பரம் தொடர்ந்து அமைதி காக்கிறார் எனவும், கேள்விகளை புறக்கணிக்கிறார் எனவும் கூறியுள்ளார். மேலும் இது பண மோசடி தொடர்பான வழக்கு என்று கூறிய அவர், நாங்கள் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் நிலையில் இருக்கிறோம், ஆனால் அவர் ஒத்துழைக்கவில்லை என கூறியுள்ளார். ஜாமினில் வெளிவராத பிடிவாரண்ட் என்பதால் காங்கிரஸ் தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி விசாரணை முடிவடைந்துவிட்டது. இதனால் ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபம் என்ன இருக்கிறது என கபில் சிபல் வாதிட்டார். மேலும் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கூறினார்.

மேலும் சிதம்பரத்தை மட்டுமே குறிவைக்கிறது சிபிஐ எனவும், ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி கொடுத்தது அவரது தனிப்பட்ட முடிவல்ல. சாதாரண நடைமுறைக்கு ஒப்புதல் வழங்கியவர் தான் நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் ஆனால் ஒப்புதலுக்கு அவர் மட்டுமே பொறுப்பேற்க இயலாது. ஒப்புதல் வழங்கிய 6 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை இல்லை ஆனால் சிதம்பரத்தை மட்டுமே குறிவைக்கிறது சிபிஐ, அதேபோல சிபிஐ கூறுவது எல்லாம் வேத வாக்கு அல்ல எனவும் கபில்சிபில் தெரிவித்துள்ளார். இது ஆவணங்கள் தொடர்பான வழக்கு மேலும் சிதம்பரம் ஒருபோதும் விசாரணையைத் தவிர்க்கவில்லை எனவும் கபில்சிபில் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு சி.பி.ஐ சிதம்பரத்தை விசாரிக்க விரும்புவதாகக் கூறினர், அவர்கள் மதியம் 12 மணி வரை விசாரணையைத் தொடங்கவில்லை, அவரிடம் 12 கேள்விகளை மட்டுமே கேட்டார்கள். இப்போது அவர்கள் என்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் கேட்கும்கேள்விகளுக்கு சிதம்பரத்துடன் எந்த தொடர்பும் இல்லை எனவும். மேலும் சிபிஐ கேட்ட கேள்விகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சிபிஐ இந்த வழக்கு பதிவு செய்த கட்டத்திலேயே விசாரித்து இருக்க முடியும் எனவும் கபில்சிபில் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக அபிஷேக் மனு சிங்வி தன்னுடைய வாதத்தினை தொடங்கினார். இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள். வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் தான் கைது நடவடிக்கை வேண்டும். இஷ்டம் போல் கைது செய்வது ஒருபோதும் கூடாது என சிங்வி தெரிவித்தார்.

ஒத்துழையாமை என்பது விசாரணைக்கு செல்ல வில்லை என்பதல்ல, அவர்கள் கேட்க விரும்பும் பதிலை அளிக்கவில்லை என்பதை ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள். அவர் விசாரணைக்கு செல்லாமல் இருந்தால் தான் அது ஒத்துழையாமை என சிங்வி கூறினார். மேலும் சிதம்பரம் நீதிமன்றத்தில் வாதிட விரும்புவதாக சிங்வி கூறியபோது, ​​சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆட்சேபனை தெரிவித்தார்,

ஆனால் அவர் வாதிட அனுமதி அளிக்க வேண்டும் என சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கோரிக்கை வைத்தார். இப்படியான காரசாரமான விவாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை அரை மணி நேரத்திற்கு பிறகு வழங்குவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

தீர்ப்பை வாசித்த நீதிபதி சிபிஐ வாதத்தினை ஏற்று சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டார். மேலும் அவரை 5 நாட்கள் (August 26.) நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்

இந்த 5 நாட்களில் அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் சந்திக்க ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்களை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.