ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை பெற்றுக்கொடுக்க மும்மரமாக வேலைப்பாடுகளில் ஜலனி பிரேமதாஸ இறங்கியுள்ளார்.
அந்த வகையில் சஜித்திற்கு சார்பாக கட்சியின் உறுப்பினர்களைத் திரட்டும் விசேட முயற்சியை ஜலனி பிரேமதாஸ ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் முதற்கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் பலருக்கும் கடந்த சில தினங்களாக ஜலனி பிரேமதாஸ தொலைபேசி அழைப்பு எடுத்து உரையாடிவருவதாகவும் கூறப்படுகின்றது.
அவர்களிடம் சுகதுக்கங்களை விசாரிக்கும் ஜலனி பிரேமதாஸ பலதும் பத்தும் கதைத்து வருகின்றார்.
விசேடமாக சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக நாளை மாத்தறையிலும், எதிர்வரும் தினங்களில் மாவட்டங்கள் தோறும் நடத்தப்படுகின்ற மக்கள் கூட்டங்களில் கலந்துகொள்ளும்படி அவர் அழைப்பு விடுத்து வருகின்றார்.
அத்துடன் கூட்டத்திற்கு வந்து கலந்துகொள்வதற்கான உதவிகளையும் தாம் செய்துகொடுப்பதாகவும் ஜலனி கூறியுள்ளார்.
அந்தவகையில் மாத்தளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி கவிரத்ன மற்றும் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் துசித்தா விஜேமான்ன ஆகியோருடனும் அவர் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை மங்கள சமரவீரவினால் மாத்தறையில் சஜித் பிரேமதாஸவுக்காக ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்திற்கு தவறாமல் வரும்படியும் ஜலனி பிரேமதாஸ அவர்களிற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.