அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் இரவு சஜித் பிரேமதாஸவுக்கும் இரா.சம்பந்தனுக்கு இடையில் முக்கியமான சந்திப்பு நடைபெற்றது. அமைச்சர் மங்களவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கின்றேன். என்னை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகக் களமிறக்குமாறு கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் ஆகியோர் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நான் நியமனம் பெறாத பட்சத்தில் பொதுவேட்பாளராகப் போட்டியிடுமாறும் எனக்குப் பல தரப்பினராலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அல்லது பொதுவேட்பாளராக நான் களமிறங்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு எனக்குக் கட்டாயம் தேவை. வடக்கு, கிழக்கில் மாபெரும் பிரசாரக் கூட்டங்களை நடத்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அத்துடன், எனது பிரசாரக் கூட்டங்களில் கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும்” என்று இந்தச் சந்திப்பின்போது இரா.சம்பந்தனிடம் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.