அவுஸ்திரேலியாவை புரட்டியெடுத்த ஆர்ச்சர்..

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில், அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 179 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நேற்று தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆர்ச்சரின் வேகத்தில் ஹாரிஸும்(8), பிராட்டின் பந்துவீச்சில் கவாஜாவும்(8) ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன்பின்னர் களமிறங்கிய லபுஸ்சாக்னே, வார்னருடன் கைகோர்த்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இந்நிலையில், டேவிட் வார்னர் டெஸ்டில் தனது 30வது அரைசதத்தை எட்டினார். அணியின் ஸ்கோர் 136 ஆக உயர்ந்தபோது, ஆர்ச்சரின் பந்துவீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வார்னர்(61) ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆர்ச்சரின் தாக்குதலான பந்துவீச்சில் அவுட் ஆகினர். அணித்தலைவர் பெய்ன் 11 ஓட்டங்கள் எடுத்தார். 9வது விக்கெட்டாக அவுட் ஆன லபுஸ்சாக்னே மட்டும் 74 ஓட்டங்கள் சேர்த்தார்.

அவுஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 52.1 ஓவருக்கு 179 ஓட்டங்களில் சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் மிரட்டலாக பந்துவீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளையும், பிராட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.