தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலால் மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு அதிகாரிக்ள தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஆறு பேர் குழு இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாகவும், அவர்கள் கோயம்புத்தூரில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து கோவையில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆறு பேரில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டவர், மற்றவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தானியர் இலியாஸ் அன்வர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்கள், விநாயகர் சதுர்த்தி, வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா உள்ளிட்ட விழாக்கள் தமிழகத்தில் நடைபெறும்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழக டிஜிபிக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து தமிழகம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விமான, ரயில் நிலையங்களில் மோப்ப நாய்களுடன் சோதனைகள் நடைபெறுகிறது; கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.