இனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விடயமும் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இவ்விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல பாகிஸ்தான் முயற்சித்தது. ஆனால், அந்நாட்டின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தான் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
ஆனால், பயங்கரவாதத்திற்கு ஆதரவான நடவடிக்கையை கைவிட்டால் மட்டுமே, பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று இந்தியா மீண்டும் தெரிவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவிடம் இனி பேசுவதற்கு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேட்டியளித்த அவர் கூறுகையில்,
‘பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நம்பத்தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
இனிமேல் செய்வதற்கு ஏதுமில்லை. இருப்பினும், இந்தியா தொடர்ந்து குறை கூறி வருகிறது. இந்தியாவில் இருப்பவர்களை சமாதானப்படுத்தவே இந்தியா அவ்வாறு கூறுவதாக எண்ண தோன்றுகிறது. எனவே, இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விடயமும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.