லஷ்கர்-இ-தைபா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் கோவையில் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
லஷ்கர்-இ-தைபாவின் ஆறு உறுப்பினர்கள் குழு இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் கோவையில் குடியேறியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து கோவைக்கு நள்ளிரவு முதல் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தனை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும் மற்றவர்கள் இலங்கை தமிழ் இஸ்லாமியர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கோவையில் இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்க கூடும் என்ற அடிப்படையில் நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை , மற்றும் இருசக்கர , நான்கு சக்கர வாகனங்கள் பேட்ரோல், மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையினர் சீருடையிலும், மப்டியிலும் கண்காணிப்பு போன்ற பணிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாநகரில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இது மட்டுமின்றி மோப்ப நாய் பிரிவு, வெடி குண்டு மீட்பு பிரிவு, காவல் விரைவு தகவல் பிரிவு மற்றும் அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதே போல மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போதிய பாதிகாப்பு போடப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை, சந்தேகிக்கும் வகையில் யாராவது தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.