15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியொருவரை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் குடும்பஸ்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொககெர்க்கஸ் வோல்ட் கீழ் பிரிவு தோட்ட பகுதியில் வசித்த 15 வயது சிறுமி, குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் நேற்று (23.08.2019) வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த 15 வயது சிறுமி கர்ப்பம் தரித்த விடயம் வெளியானதை தொடர்ந்து, சிறுமி கடந்த 3 தினங்களுக்கு முன்பு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சிறுமி குழந்தையை பிரசவித்துள்ளார்.

பிரசவிக்கபட்ட குழந்தைக்கு 5 மாதங்கள் மட்டுமேயென்பதால், குழந்தை இறந்தே பிறந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது குறித்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸாருக்கு, தாம் கர்ப்பம் தரித்தமைக்கான காரணம் கினிகத்தேன பகுதியை சேர்ந்தவர் என சிறுமி வழங்கபட்ட வாக்குமுலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளதாகவும் சந்தேக நபர் திருமணமானவர் என கினிகத்தேன பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த சிறுமி தொடர்ந்தும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், கைது செய்யபட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.