உயிரிழந்த தமிழர் ஒருவரின சடலத்தினை அடக்கம் செய்ய விடாது தடுத்த பொலிஸாரை எதிர்த்து பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும சடலத்தை அடக்கம் செய்துள்ள சம்பவம் ஒன்று மத்துகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மத்துகம பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் கங்காணியாராக பணியாற்றிய 70 வயதான தமிழர் ஒருவர் அண்மையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வயோதிபரின் சடலத்தை அந்த தோட்ட மயானத்தில் தகனம் செய்ய தோட்ட உரிமையாளர் அனுமதி அளிக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் தெபுவன பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெபுவன பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து தடையுத்தரவை பெற்றதோடு அதையும் மீறி குறித்த உடலை தோட்டத்துள் தகனம் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து செய்வதறியாது தவித்த உயிரிழந்த நபரின் உறவினர்கள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவை தொடர்பு கொண்டு தங்களது நிலைமையை தெளிவுபடுத்தினர்.
அதனையடுத்து உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்ட பிரதியமைச்சர் குறித்த இடத்திற்கு வந்து உயிரிழந்த சடலத்தை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன் மக்களுடைய அச்சத்தைப் போக்கி அவரே இறுதிக் கிரியைகளையும் நடத்திச் சென்றுள்ளார்.
இந்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்ற தடை உத்தரவு தொடர்பில் பிரதியமைச்சரை அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், பிரதியமைச்சர் சடலத்தை மயானம் வரை எடுத்துச் சென்று பொலிஸாரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இறுதி சடங்குகளை செய்ய உதவினார்.
இந்த சடலத்தை புதைக்கும்போது வருகை தந்திருந்த பொலிஸாரிடம் பிரதியமைச்சர் உயிரிழந்த நபரின் மரண சான்றிதழையும் ஒப்படைத்தார்.
இதன்பின்னர் குறித்த இடத்திலிருந்து விலகிச் சென்ற பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் ஓகஸ்ட் 27ஆம் திகதி மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அப்பாவி தோட்ட தமிழ் மக்களுக்கு சிங்களவர் ஒருவரின் மயானத்தில் சடலத்தை புதைப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை எனவும் தான் சட்டத்திற்கு இணங்க செயற்பட்டதாகவும் ஏதேனும் தண்டனைகள் வழங்கப்பட்டால் அப்பாவி மக்களுக்கு அல்லாமல் தனக்கு வழங்குமாறும் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.