நேருக்குநேர் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்!

ஸ்பெயின் நாட்டில் ஹெலிகாப்டர் மற்றும் இலகுரக விமானத்திற்கு இடையே ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் Majorca பகுதியில், உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணியளவில் ஹெலிகாப்டரும், இலகுரக விமானம் ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன.

இந்த சம்பவத்தில் முதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது அதன் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

பால்மா மற்றும் பொலென்சா இடையே அமைந்துள்ள இன்கா தீவு பகுதியில் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் சரியான தன்மை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சில உள்ளூர் அறிக்கைகள் இலகுவான விமானத்துடன் ஹெலிகாப்டர் மோதியதாக தெரிவிக்கின்றன.

இதில் தன்னுடைய 43வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் சென்ற ஜேர்மனியை சேர்ந்த ஒரு நபரும் கொல்லப்பட்டுள்ளார். அவர் பிறந்தநாளை கொண்டாடுவதற்காகவே இரண்டு ஹெலிகாப்டர்களை ஏற்பாடு செய்திருந்ததாக தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் அந்த நபரின் பெயரை உடனடியாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அவர் மியூனிக் நகரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஆகஸ்டு இன்செல்காமர் என அழைக்கப்படுகிறார். இவர் பிரான்ஸ் இன்செல்கம்மரின் மகன் என்று நம்பப்படுகிறது.