ருத்ர தாண்டவம் ஆரம்பம்.. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

கேரளாவில் இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் போதுமான அளவு மழை பொழிவு இல்லை. அதன்பிறகு இந்த மாத தொடக்கத்தில் இருந்து தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது.

கடந்த சில வாரங்களாகவே பரவலான மழை பெய்து வந்தது. தீடீரென ஏற்பட்ட தென்மேற்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக கனமழை ஏற்பட்டு வெள்ளப்பெருக்கானது அதிகரித்தது. கனமழையின் காரணமாக கடலோர மாவட்டத்தில் உள்ள பல பகுதியில் இருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதித்தது.

மழையின் வெள்ளத்தில் கேரள மாநிலத்தில் முக்கிய சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளதால், பல்வேறு பகுதியில் போக்குவரத்து அடுத்தடுத்து துண்டிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாது இரயில் சேவை மற்றும் விமான சேவையும் கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலரும் உயிரிழந்தனர். உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகளும் இடிந்து விழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

அதன்பிறகு மழை குறைந்து இயல்புநிலை திரும்ப தொடங்கியதால் முகாம்களில் இருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். இந்நிலையில் கேரளாவில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 5 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மழையின் போது பலத்த காற்று வீசும் என்றும், பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.