இந்திய அணி அபார வெற்றி..!

ஆன்டிகுவா டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி சாதனை வெற்றி மகுடம் சூடியது.

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்களுக்கும், மேற்கிந்திய தீவுகள் 222 ரன்களுக்கும் ஆட்டத்தை இழந்தது.

இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா, மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்திருந்தது. இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில் கேப்டன் கோலி, மேற்கொண்டு ரன் சேர்க்காமல் 51 ரன்களில் வெளியேறினார். பின்னர் ரஹானேவுடன் கைகோர்த்த விஹாரி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் ஆடிய ரஹானே டெஸ்ட் அரங்கில் தனது 10-வது சதத்தை பதிவு செய்தார்.

மேலும், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விஹாரி 93 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 343 ரன்கள் சேர்த்திருந்த போது டிக்ளேர் செய்தது.

பின்னர் 419 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணியில் முன்வரிசை வீரர்கள் பும்ரா, இஷாந்த் சர்மாவின் வேகத்தில் ஆட்டமிழந்தனர். 100 ரன்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி சுருண்டது. இதன் மூலம் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.

இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இப்போட்டியில் இரண்டு இன்னிங்சுகளிலும் சேர்த்து 183 ரன்கள் விளாசிய ரஹானே ஆட்டநாயகனாக தேர்வானார்.

இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதித்தது. முன்னதாக 2017-ல் இலங்கைக்கு எதிராக 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதே சாதனையாக இருந்தது

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் வருகிற 30-ம் தேதி கிங்ஸ்டனில் தொடங்குகிறது. இந்த வெற்றி மூலம் டெஸ்ட் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியின் இந்தியாவின் பங்குக்கு 60 புள்ளிகள் கிடைத்துள்ளன.