தூக்கில் சடலமாக தொங்கிய இளம்பெண்!

தமிழகத்தில் கணவன் வீட்டில் கழிவறை இல்லாததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருநெல்வேலியில் உள்ள சிதம்பரபுரத்தைச் சேர்ந்த ஷாலினிக்கும் சசிகுமாருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் முடிந்த நாள் முதலே வீட்டில் கழிவறை கட்டித் தர வேண்டும் என கணவன் சசிக்குமாரிடம் ஷாலினி வற்புறுத்தி வந்தார்.

ஆனால் 7 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களைக் கூறி கழிவறை கட்டி தராமல் சசிகுமார் காலம் தாழ்த்தி வந்தார்.

இது தொடர்பாக சசிகுமாருடனும், மாமனார் பால்பாண்டியுடனும் அடிக்கடி ஷாலினி சண்டை போட்டு வந்த நிலையில் பதிலுக்கு அவர்களும் ஷாலினியை திட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கழிவறை தொடர்பாக மீண்டும் பிரச்னை எழுந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த ஷாலினி அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக சசிகுமார் மற்றும் பால்பாண்டியும் அவரது வீட்டுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்றுக்கொள்ளாத பெண் வீட்டார், ஷாலினியை கணவரும் மாமனாரும் அடித்துக் கொன்றுவிட்டதாக பொலிசில் புகாரளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து இது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.