அமமுக, மாவட்ட நிர்வாகிகள் சில நாட்களாகவே மிகப்பெரிய குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். சிறைக்குச் சென்ற சசிகலா விரைவில் திரும்பி வரக் கூடும்.வெளியில் வரும் பட்சத்தில் அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது.
இதுகுறித்து அவர்கள், “சசிகலாவிற்கும், தினகரனிற்கும், சிண்டு முடியும் வேலையை ஏற்கனவே சிலர் பார்த்து விட்டனர். இதனால் இருவருக்கும் இடையில் விரிசல் என்ற செய்திகளை நாங்கள் நம்பவில்லை. தனிக்கட்சி ஆரம்பித்ததற்காக தினகரன் மீது சசிகலா கோபமாக இருக்கிறார் எனக் கூறப்பட்டது. சசிகலாவை பொருத்தவரை 35 வருஷம் அம்மாவுடன் இருந்தார்கள். இரட்டை இலை சின்னத்திற்கு வேலைபார்த்து இருக்கின்றார்.
இரட்டை இலை பக்கம்தான் நாம் எப்போதும் இருக்க வேண்டுமென தினகரன் இடம் சசிகலா அடிக்கடி கூறி இருக்கிறார்கள். ஆனால், வெளியிலிருந்து தினகரன் நடைமுறை ரீதியான எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புரிந்து கொண்டு, சசிகலா அமமுகவின் தற்போதைய நிலைக்கு ஓகே சொல்லிவிட்டார். சசிகலா வெளியில் வந்தபிறகு தான் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கின்றது.
அதனால், ஏற்கனவே எடப்பாடி சசிகலாவிடம், “தன்னை முதல்வர் வேட்பாளராக ஆக்கினார். பொதுச்செயலாளர் பதவிக்கு ஏற்பாடு செய்கிறோம். மேலும் எந்தக் காரணம் கொண்டும் திமுகவிடம் வெற்றியை தாரைவார்த்து விடக்கூடாது”, என்றும் எடப்பாடி தெளிவாக கூறியுள்ளார். ஜெயலலிதாவின் சொத்துக்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் சசிகலாவுக்கு மட்டுமே தெரிந்ததாதனால் நிதி பிரச்சினையும் வராமல் இருக்கும் என எடப்பாடி திட்டமிடுகிறார்.
இதற்கு பன்னீர்செல்வம் அதிகப்படியான எதிர்ப்பை தெரிவிக்க மாட்டார் என்பது எடப்பாடியின் கணிப்பாக இருக்கின்றது. அந்த விஷயத்தில் சசிகலாவின் முடிவு என்ன என்பது தினகரனுக்கு பிடிபடவில்லை. “ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி என்பது போல, இரட்டை இலை இருக்கும் இடம்தான் எனக்கு அதிமுக” என்று தினகரனிடம் பலமுறை சசிகலா கூறியிருக்கிறார். அதனால், வெளியில் வந்ததும் என்ன மாதிரியான நிலைப்பாட்டை அவர் எடுப்பார் என புரியவில்லை. ” என கூறுகின்றனர்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ‘அதிமுகவை மீட்பது தான் நமது நோக்கம்’ என தினகரன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படி ஒரு கருத்தை பேசி இருப்பதும் கவனிக்கத்தக்கது. சசிகலாவின் ரிலீசுக்கு பின்னர் மிகப்பெரிய அரசியல் திருப்பம் ஏற்படும் என்பதும் உறுதியானது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.!