பாகிஸ்தானுக்கு எதிராக முதல் கண்டணத்தை பதிவு செய்த ராகுல்!!

காஷ்மீர் ஆளுநரின் அழைப்பை ஏற்று ஸ்ரீநகருக்கு 12 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பயணித்த ராகுல் காந்தி காஷ்மீர் உள்ளேயே அனுமதிக்கப்படாமல் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார். அப்போது பேசிய ராகுல் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை என தெரிவித்தார்.

இதையடுத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜம்மு காஷ்மீர் ஆளுநர், ராகுல் காந்தி தமது அழைப்பை அரசியலாக்கியதால் தான் விடுத்த அழைப்பை திரும்பப் பெற்றுக் கொண்டதாக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் அமைதியை மீட்டு வருவதற்காக அரசு நிர்வாகம் முழு மூச்சாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அமைதியைக் குலைப்பதற்காக எந்த ஒரு அரசியல்வாதியும் ஜம்மு காஷ்மீர் உள்ளே வரவேண்டாம் என்பதை முன்கூட்டியே தெளிவுபடுத்தியதாக சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பற்றிய தவறான தகவல்களை நம்பி ராகுல்காந்தி வெளியிட்டு வரும் அறிக்கைகளை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற மலிவான அரசியலை கைவிட்டு நாட்டின் பாதுகாப்பையும் நலனையும் ராகுல்காந்தி முன்னிலைப்படுத்த வேண்டும் என ஜம்மு காஷ்மீர் ஆளுநர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார் .

இந்தநிலையில், ராகுல்காந்தி இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், பாகிஸ்தான் உட்பட எந்த நாடுகளும் இதில் தலையிட இடமில்லை என்றும் ஜம்மு காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தானே காரணம் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 பிரிவை மத்திய அரசு ரத்து செய்த பிறகு ராகுல் காந்தி முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.