பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்க காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுர எம்.பி.யுமான சசி தரூருக்கு கேரள காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்புள்ளது. நமது நாட்டின் பிரதமர் மோடி சரியானதைச் சொல்லும் போதோ அல்லது செய்யும்போதோ புகழப்பட வேண்டும் என்று சசி தரூர் கூறியிருந்தார்.
சசி தரூர் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மோடி குறித்து சர்ச்சைக்குரிய இந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்குமாறு சசிதரூருக்கு கேரள மாநில காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவாகரத்தில் அவர் அளிக்கும் விளக்கத்தை பொறுத்தே சசி தரூர் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த சூழ்நிலையில் மோடிக்கு ஆதரவான கருத்தை சசி தரூ கூறினார் என்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும் மோடிக்கு எதிரான தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்ற தூண்டியது எது என்பது குறித்து சசி தரூர் விளக்க வேண்டும் என்றும் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இதனிடையே இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ள சசி தரூர், தான் மோடி தலைமைலான அரசை கடுமையாக விமர்சிப்பவன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் எடுக்கும் ஆக்கப்பூர்வமான முறையை நம்புவதாகவும் தனது கருத்தில் உடன்பாடு இல்லை என்றாலும், சக கட்சியினர் எனது அணுகுமுறைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.