இந்தியாவின் மராட்டிய மாநிலத்தின் முதல் திருநங்கை பத்திரிகையாளரான சோயா, தமது கனவுகள் அனைத்தையும் போராடி வென்ற கதையை உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
மராட்டியத்தின் மும்பை மாநகரின் முதல் திருநங்கை பத்திரிகையாளரான சோயா, தமது பத்தாவது வயதிலேயே, தான் ஏனைய ஆண்களில் இருந்து வேறுபட்டவர் என்பதை புரிந்து கொண்டதாக வெளிப்படுத்தியுள்ளார்.
தந்தையின் மறைவுக்கு பின்னர், குடும்பத்தாரால் குடியிருப்பில் இருந்து தாயாருடன் வெளியேற்றப்பட்ட நிலையில்,
அந்த அதிர்ச்சியில், சோயாவின் தாயார் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். மது அருந்தினால் அவர், தெருவில் வருவோர் போவோர் அனைவரிடமும் சண்டைக்கு செல்வதும், அவர்களை தாக்க முயல்வதுமாக இருந்துள்ளார்.
பலமுறை தமது தாயார் மாயமாவதாகவும், திரும்பி வருவாரா மாட்டாரா என அறியாமல் பல நாட்கள் காத்திருந்துள்ளதாகவும் சோயா பதிவு செய்துள்ளார்.
தாயாரின் மது அருந்தும் பழக்கம் காரணம், குடியிருந்த அனைத்து வீடுகளில் இருந்தும் வெளியேற்றப்பட்ட நிலையில்,
தெருவுகளில், ரயில் நிலையங்களில் இரவு தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறும் சோயா,
ஒரு வேளை உணவுக்காக, பணத்திற்காக எந்த வேலையும் செய்யும் நிலையில் இருந்தாலும், தனது உணர்வுகளை மறைத்து வைத்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் போன்று அலங்காரம் செய்து கொள்வதை பார்த்த தாயார் ஒருமுறை தமக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி, ஒரு மசூதியில் அழைத்து சென்றார்.
அங்கே ஒரு திருநங்கையுடன் ஏற்பட்ட அறிமுகம், தமது வாழ்க்கையை தலை கீழாக மாற்றியதாக சோயா வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த திருநங்கையுடன் நட்பில் ஏற்பட்ட ஓராண்டுக்கு பின்னர், அவர்கள் சமூகத்தில் தம்மை ஏற்றுக் கொண்டதாக கூறிய சோயா,
அதன் பின்னர் தமது நிலையினை தாயாருடன் வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். ஆனால் தாயார் அதை கடுமையாக எதிர்த்ததாக கூறும், தொடர்ந்து அதுவரை இருந்த நண்பர்களும், உறவினர்களும், அறிமுகமான அனைவரும் தம்மை வெறுத்து ஒதுக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கொடுமையான நிலையிலும், தாம் தலைமுடி நீட்டி வளர்த்தியதாகவும், உதட்டில் சாயம் பூசிக்கொண்டதாகவும், பெண்கள் போன்று உடை உடுத்திக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ரயிலில் பயணம் செய்த போது, காவலர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது பின்னர் காவல் நிலையத்தில் நிர்வாணப்படுத்தி காவலர்களால் தாக்கப்படும் நிலை வரை சென்றது என சோயா வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து ஒரு வேலைக்காக அலைந்து, பலமுறை அவமானப்படுத்தப்பட்டு நொந்து போன ஒரு நாளில், கல்லூரி மாணவிகள் சிலரின் அறிமுகம் கிடைத்தது.
அவர்கள் உருவாக்கும் ஆவணப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆவணப்படம் வெளியான பின்னர் சில தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்ததாக கூறும் சோயா,
ஒருமுறை ஊடக உரிமையாளர் ஒருவர் தமது மேடைப்பேச்சை கேட்டு பாராட்டவே, அவரிடம் வேலை இருந்தால் வழங்குங்கள் என கேட்டதாக கூறும் சோயா,
அவரின் நிறுவனத்தில் தமக்கு பத்திரிகையாளராக வாய்ப்பு அளித்ததாகவும், அதுவே மும்பை மாநகரின் முதல் திருநங்கை பத்திரிகையாளராக மாறினேன் என தமது அதுவரையான வாழ்க்கையை அந்த ஊடகத்தில் சோயா பகிர்ந்துள்ளார்.