இல்லப் பணிப்பெண்ணாக சிங்கப்பூரில் வேலை செய்துவந்த திருவாட்டி ஜொனலின் அல்வரஸ் ரவிஸின் அழுகிய சடலம் சென்ற ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி தெம்பனிஸ் சாலையிலுள்ள காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
பிலிப்பினோ நாட்டைச் சேர்ந்த திருவாட்டி ரவிஸைக் காணவில்லை என அவரது முதலாளிகள் போலிசாரிடம் புகார் செய்து மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சடலத்தின் கழுத்தைச் சுற்றி கயிற்றால் முடிச்சு போடப்பட்டிருந்தது. அந்த முடிச்சு ஒரு சிறிய மரத்துடன் கட்டப்பட்டிருந்தது.
திருவாட்டி ரவிஸின் மரணம் குறித்து செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்த விசாரணையின்போது, போலிசார் இதனைக் கொலை என வகைப்படுத்தி இருப்பதாகவும், அவரது பங்ளாதேஷி கணவர் திரு ராஜு டேலி கொலையாளி என சந்தேகிக்கப்படுவதாகவும் புலனாவ்யு அதிகாரி டெஸ்மண்ட் இங் தெரிவித்தார்.
பராமரிப்புப்பணி ஊழியரான திரு ராஜு 2007 முதல் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். இவரும் 34 வயது திருவாட்டி ரவிஸும் 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். மறு ஆண்டு திருவாட்டி ரவிஸ் மீண்டும் சிங்கப்பூரில் பணிப்பெண்ணாக வேலை செய்யத் திரும்பி வந்தார்.
திரு ராஜு சென்ற ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவுக்குச் சென்றதாகவும், அவர் இருக்குமிடம் தெரியவில்லை என்றும் மரண விசாரணை நீதிபதி கமலா பொன்னம்பலத்திடம் அதிகாரி இங் தெரிவித்தார்.
திருவாட்டி ரவிஸ் “கழுத்தில் அழுத்தப்பட்ட காயத்தால்” மரணமடைந்ததாகவும், அவரது மரணம் “பெரும்பாலும் அவரது கணவரால் செய்யப்பட்ட சட்டவிரோதக் கொலையாக இருக்கக்கூடும்” என்றும் நீதிபதி கமலா கூறினார்.
திருவாட்டி ரவிஸின் கழுத்து நெரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரி இங் கூறினார்.
ராஜு திடீரென புறப்பட்டுச் சென்றதற்குக் காரணமில்லை என்றும், அவரைக் கைது செய்ய கைதாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் மரண விசாரணை நீதிபதி கூறினார்.