ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று நடைபெற்றுள்ளது.
கூட்டமைப்பின் உயர்மட்ட தலைவர்கள் இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதனால் கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்படும் சாத்தியம் இல்லை என கூறப்படுகிறது.
ஜனாதிபதி, மகாவலி அபிவிருத்தி அமைச்சு, தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகள், வடக்கு ஆளுனர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், சீ.யோகேஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவமோகன், ஈ.சரவணபவன், சிறிநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
11 மணிக்கு கூட்டம் ஆரம்பிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தபோதும், 11.20 அளவிலேயே கூட்டம் இடம்பெற்றது.
கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள், முக்கிய விவகாரத்தை பேசும் கூட்டத்தில் கலந்துகொள்ளாததால் கோபமடைந்த ஜனாதிபதி கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.
விவகாரத்தை பேசும் முக்கிய தலைவர்கள் இல்லாததால், மாவை சேனாதிராசாவே ஆரம்பித்தார். வழக்கம்போல, சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் நீண்டநேரம் அலட்டிக் கொண்டேயிருந்தார். அதிகாரிகளும் தூங்க தொடங்கினார்கள்.
இதனால் கூட்டத்தின் ஆரம்பமே சுமுகமாகவும், பிரச்சனைகள் முறையாக வெளிப்படுத்தப்படுவதாகவும் அமையவில்லையென மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் இல்லாததால், ஜனாதிபதியும் சுருக்கமாக சில விடயங்களை பேசிவிட்டு, 12 மணிக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
இதன்பின், வடக்கு ஆளுனர் தலைமையில் கூட்டம் இடம்பெற்று வருகிறது.
வடக்கில் பெருமளவு நிலங்களை விடுவித்து விட்டதாக இராணுவம் குறிப்பிட்டு, காணொளி விளக்கமளிக்கப்பட்டது.
தற்போது, தேசிய பாதுகாப்பிற்கு தேவையான நிலங்களே இராணுவத்திடம் இருப்பதாகவும், அத்தியாவசிய தேவையான நிலங்களை குறிப்பிட்டால், விடுவிப்பது தொடர்பாக ஆலோசிக்கலாமென்று இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
கலந்துரையாடல் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. எனினும், இன்றைய கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள், ஜனாதிபதி இன்மையால் உறுதியான முடிவுகள் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.