பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரனின் மனைவியை, பிரேசில் ஜனாதிபதி கேலி செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமேசன் காட்டுத் தீ விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரனுக்கும், பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோவுக்கும் இடையே உரசல் நீடிக்கிறது.
இந்த நிலையில் போல்சனாரோவின் ஆதரவாளர் ஒருவர் பேஸ்புக்கில், “இப்போது புரிகிறதா ஏன் போல்சனாரோவை, மேக்ரன் வம்புக்கு இழுக்கிறார் என்று?” என கூறி மேக்ரனின் 66 வயது மனைவியான பிரிகிட் மேக்ரனின் புகைப்படத்தையும், போல்சனாரோவின் இளவயது மனைவி மிச்செல்லே போல்சனாரோவின் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
அந்த பதிவில் ஜனாதிபதி போல்சனாரோ, “அவரை அசிங்கப்படுத்தாதீர்கள். ஹா ஹா” என ‘கமெண்ட்’ செய்தார்.
பிரேசில் ஜனாதிபதியின் இந்த செயல் மேக்ரனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அவர் போல்சனாரோவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “என் மனைவி குறித்து மிகவும் கீழ்த்தரமான கருத்து சொல்லியிருக்கிறார். இது மிகவும் வருத்தமானதாகும்.
குறிப்பாக பிரேசிலின் குடிமக்களுக்கு. தங்கள் நாட்டு ஜனாதிபதி இப்படி கீழ்த்தரமான ஒரு விஷயத்தை செய்துள்ளாரே என்று அந்நாட்டுப் பெண்கள் அவமானப்படுவார்கள் என நினைக்கிறேன்.
பிரேசில் நாட்டு மக்கள் உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள். அவர்களும், இதைப் பார்த்து அவமானப்படுவார்கள்” என கூறினார்.