மனிதர்கள் முதல் தேவர்கள் வரை, யாராக இருந்தாலும் எந்தவொரு காரியத்தை ஆரம்பிக்கும்போதும், அது இடையூறின்றி இனிதே நடந்து முடிய விநாயகரை வழிபடுவது ஐதீகமாகும்.
முதன்மையானவர்:
நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். ‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். விநாயகர் என்பது, இவருக்கு மேல் பெரிய தலைவர் (முதன்மையானவர்) எவருமில்லை என்பது முழுப் பொருளாகும். கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது ‘ஓம் அநீஸ்வராய நம’ என்றும் கூறுவார்கள். அநீஸ்வராய என்பதற்கு தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் (இறைவன்) இல்லை என்பது பொருளாகும்.
நவக்கிரக நாயகன்:
ஓம்காரமான பிரணவத்தின் நாயகனாய் திகழும் விநாயகரின் உடலில் நவக்கிரகங்கள் அடங்கி இருக்கின்றன. விநாயகரின் நெற்றியில் சூரியன் உறைந்துள்ளார். அதே போல் நாபியில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாயும், வலது கீழ் கையில் புதனும், வலது மேல் கையில் சனியும், தலையில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்ரனும், இடது மேல் கையில் ராகுவும், இடது தொடையில் கேதுவும் இடம்பெற்றுள்ளனர். எனவே விநாயகரை தரிசனம் செய்தாலே நவக் கிரகங்களையும் வழிபட்டு துதித்ததற்கான பலன் கிடைக்கும்.
பெண் வடிவில் பிள்ளையார்:
விநாயகர் சில தலங்களில் பெண் வடிவில் வணங்கப்படுகிறார். பெண் வடிவிலான விநாயகரை விக்னேஸ்வரி, விநாயகி, கணேசினி ஆகிய பெயர்களில் அழைக்கிறார்கள். பவானியில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் வீணை மீட்டும் விநாயகியைக் கண்டு தரிசனம் செய்யலாம். அதே போல் நாகர்கோவில் அருகே உள்ள வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் திருக்கோவிலில் வீணை வாசிக்கும் புலிக்கால்களைக் கொண்ட வியாக்ரபாத விநாயகியை தரிசிக்கலாம்.
செல்வம் தரும் அகவல்:
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்தத் துதிகளை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.
விநாயகருக்கு தாலி:
தாலி பெண்களுக்கு உரிதானது, என்றாலும் மதுரையில் உள்ள ஒரு விநாயகருக்கு, தாலி கட்டி அழகு பார்க்கிறார்கள் கன்னிப் பெண்கள். இந்தச் சடங்கு மதுரை வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் கோவிலில் நடக்கிறது.
இந்த ஆலயத்திற்கு வரும் கன்னிப்பெண்கள், தங்களின் வயதுக்கேற்ற எண்ணிக்கையிலான விரலி மஞ்சளைத் தாலிக் கயிற்றில் கட்டி விநாயகருக்கு அணிவிக்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவருக்கு தாலி கட்டி பிரார்த்தனை செய்து கொண்டால், கிரக தோஷம் நீங்கி நல்ல கணவர் அமைவார் என்பது நம்பிக்கையாகும்.