காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 5-ம் தேதி ரத்து செய்ததுடன், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.
இந்த முடிவுக்கு பாகிஸ்தான் அரசு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் இந்தியாவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டு வான் எல்லைகளில் இந்திய விமானங்கள் பறக்க முழுவதும் தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்தன.
பாகிஸ்தான் மந்திரி ஃபாவத் ஹூசைன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியது. அந்த செய்தியில், “பாகிஸ்தானின் வான் எல்லையைத் தொடர்ந்து இந்தியா பயன்படுத்தாத வண்ணம் தடை செய்யவும், இந்தியா – ஆப்கானிஸ்தான் வர்த்தக பரிமாற்றத்திற்கான சாலை வழிப்போக்குவரத்தையும் தடை செய்யவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது என தெரிவித்துளளார். மேலும் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வான் எல்லையை மூடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டது என பதிவிட்டுள்ளார்” என செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, பாகிஸ்தான் தனது வான்வெளியில் இந்தியாவை தடை செய்ய இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் மேலும் இது குறித்து முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் பிரதமர் அவர்களிடம் மட்டுமே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்