மனைவியை வழியனுப்பி வைப்பதற்காக நுழைவு அட்டையைத் தவறாகப் பயன்படுத்திய ஆடவர் கைது!!!

சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் மட்டுமே நுழையக்கூடிய  (டிரான்சிட்) பகுதிக்குள் செல்வதற்காக நுழைவு அனுமதி அட்டையை (போர்டிங் பாஸ்) தவறாகப் பயன்படுத்திய ஆடவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலிசார் புதன்கிழமை ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தனர்.

அந்த 27 வயது ஆடவருக்கு நாட்டிலிருந்து புறப்பட்டுச்செல்லும் எண்ணம் இல்லை என்பதும், தனது மனைவியை வழியனுப்பி வைப்பதற்காகவே அப்பகுதிக்குள் நுழைந்தார் என்பதும் புலன் விசாரணையில் தெரியவந்தது.

நுழைவு அனுமதி அட்டைகளைத் தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்தியதற்காக இவ்வாண்டு ஜனவரியிலிருந்து இதுவரை 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் மட்டுமே நுழையக்கூடிய பகுதிகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக உள்ளன. நுழைவு அனுமதி அட்டை வைத்திருக்கும் பயணிகள், விமானத்தில் பயணம் செய்யும் நோக்கத்திற்காக மட்டுமே இப்பகுதிக்குள் நுழையவேண்டும்.

பயணம் செல்லும் எண்ணமில்லாமல் நுழைவு அனுமதி அட்டையைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம் என்றும், $20,000 வரையிலான அபராதம், ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்றும் போலிசார் பொதுமக்களை எச்சரிக்கின்றனர்.